அரியலூர், அக். 1:  சிமென்ட் ஆலைகளுக்காக நிலம் இழந்த விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பில்  முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி, தமிழர் நீதிக் கட்சி சார்பில் அரியலூரில் வெள்ளிக்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   அரியலூரில் உள்ள சிமென்ட் தொழில்சாலைகள்  மாவட்டம் முழுவதும் சிமென்ட் சாலை அமைத்துத் தர வேண்டும். அனைத்து  சிமென்ட் தொழில்சாலைகளும் ஒரு மாதக் காலத்துக்குள் புகை எரிப்பான்  கருவியைப் பொருத்தி மாசு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.    அரியலூரில் உள்ள அனைத்து சிமென்ட் தொழில்சாலைகளும் இணைந்து பொறியியல்  கல்லூரியைத் தொடங்க வேண்டும். உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு சிமென்ட்  ஆலைகளில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நிலத்தடி நீர்ப் பற்றாக்குறையை  போக்கும் வகையில், நிலம் கொடுத்த பகுதி மக்களுக்கு ஆழ்க்குழாய் கிணறு  அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில்  வலியுறுத்தப்பட்டன.   முன்னதாக, அரியலூர் ஒற்றுமைத் திடலில்  தொடங்கிய பேரணி மார்க்கெட் தெரு வழியாக வட்டாட்சியர் அலுவலகம் அருகே  நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் நீதிக்  கட்சியின் நிறுவனர்- தலைவர் சுபா. இளவரசன் தலைமை வகித்தார். ஒன்றியச்  செயலர்கள் பாலையா, இரா. அறிவழகன், செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை  வகித்தனர்.   கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் மு. செல்வம்,  பொருளாளர் கருப்புசாமி, அமைப்புச் செயலர்கள் சி. மதியழகன், முருகேசன்,  தொழில்சங்கத் தலைவர் தென்னரசு, கொள்கை பரப்புச் செயலர் கொளஞ்சி, அரியலூர்  மாவட்டத் தலைவர் க. சம்பத், சிமென்ட் பிரிவு தொழில்சங்கத் தலைவர்  முருகேசன், நகரச் செயலர் த. சுதாகர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்றனர்.   முன்னதாக, சுபா. இளவரசன் அளித்த பேட்டி:    அரியலூர் மாவட்டத்தில் தனியார் சிமென்ட் ஆலைகள் அமைவதற்கு நிலம் கொடுத்த  விவசாயிகளின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இங்குள்ள  விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பெற்ற தொழில்சாலைகள் வெளிமாநிலங்களிலிருந்து  ஆள்களை அழைத்து வந்து பணியமர்த்தி வருகின்றனர். இந்த நிலையை மாற்றி, இந்த  மாவட்டத்தைச் சேர்ந்த படித்தவர்களுக்கு சிமென்ட் தொழில்சாலைகளில் வேலை  வழங்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் சிமென்ட் தொழில்சாலைகள் வேலை  அளிக்கவில்லையெனில், அந்தத் தொழில்சாலைகள் முற்றுகையிடப்படும்.    தற்போது திமுக கூட்டணியில் தொடர்ந்து உள்ளேன். வரும் பேரவைத் தேர்தலில்  எந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்புக் கொடுத்தாலும்  போட்டியிடுவேன். பேரவைத் தேர்தலில் வாய்ப்பு இல்லாமல் மேல்சபையில்  வாய்ப்புக் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன்.   திமுக  கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தால் அதை வரவேற்பேன். தமிழகத்தில்  மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்றார் சுபா. இளவரசன்.
நன்றி:தினமணி  
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)