அரியலூர், ஜன. 6: விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் தெரிவித்தார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி அளிக்க கீழ்க்கண்ட தலைப்புகளில் இருவாரப் பயிற்சி ஜனவரி 3-வது வாரம் முதல் அரியலூர் மாவட்டத்தில் 40 பேருக்கு நடைபெற இருக்கிறது. பவர் டில்லர் இயக்குதல், பராமரித்தல், மேலாண்மை பயிற்சி, பம்ப் செட்டு, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் பற்றிய பயிற்சி ஆகிய பயிற்சிகளில் சேர, 18 வயது முதல் 40 வயது வரையிலான விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சியில் சேரும் விவசாயிகளுக்கு அரசு விதிகளின் படி, பயிற்சி முடிவின் போது உதவித் தொகை, சான்றிதழ் வழங்கப்படும். அரியலூர் பகுதிகளிலுள்ள விவசாயிகள் அரியலூர் அண்ணாநகரில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தையும், ஜயங்கொண்டம் பகுதிகளிலுள்ள விவசாயிகள் ஜயங்கொண்டம்-சிதம்பரம் சாலையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
நன்றி:தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக