முந்திரியில் தேயிலை கொசுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.
முந்திரியை தாக்கும் பூச்சிகளில் தேயிலைக் கொசுவும் ஒன்றாகும். இது முந்திரியில் அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடியது. இத்தேயிலை கொசு முந்திரி மரத்தில் இளந்தளிர், பூங்கொத்து மற்றும் பிஞ்சு உருவாகும் பருவங்களில் தாக்கி சேதம் விளைவிக்கும். எனவே இப்பூச்சியின் தாக்கத்தை அறிந்துகொண்டு கட்டுப்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.
தற்போது விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முந்திரி பூக்கும் தருவாயில் உள்ளது. இத்தருனத்தில் இப்பூச்சியானது பூங்கொத்து மற்றும் பிஞ்சுகளின் சாற்றை உறிஞ்சி அவற்றை காய்ந்து கருகிவிடச் செய்கின்றன. பாதிப்பு அதிகமானால் தாக்குண்ட கிளைகள் முழுவதும் கருகிவிடும். எனவே, இப்பூச்சியை முந்திரி பூக்கும் பருவத்தில் கட்டுப்படுத்த எண்டோசல்பான் 35இசி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி(அ) குளோர்பைரிபாஸ் 20இசி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
அத்தோடு பூக்கள் கொட்டுவதை தடுக்க இந்த மருந்தோடு லிட்டருக்கு 2-3 கிராம் என்ற அளவில் யூரியாவை பயன்படுத்தலாம். இது தவிர புரோபினோபாஸ் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 1.5 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்கவும். பின்னர் முந்திரி பிஞ்சுவிடும் பருவத்தில் இப்பூச்சியை கட்டுப்படுத்த கார்பரில் 50 சதவீத நனையும் தூள் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.0 கிராம் வீதம் கரைத்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை கடைபிடித்தோமானால் முந்திரியில் அதிக மகசூல் பெற்று லாபம் அடையலாம் என வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
நன்றி:தினமணி
Source: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=206184&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=முந்திரியில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக