வியாழன்

பூச்சிகளை விரட்டும் "அரப்பு மோர்' கரைசல்

சிதம்பரம், மார்ச்  31: இயற்கை வேளாண் பண்ணைகளை கிராமங்களில் உருவாக்கி குறைந்த செலவில் அதிக லாபம் தரும் வேளாண் தொழில்நுட்பங்களை தமிழக விவசாயிகள் தெரிந்து கொள்வது தற்கால சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாகும்.
÷இயற்கை தொழில்நுட்பங்களில் ஒன்றான அரப்பு மோர் கரைசல் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் கிராமங்களில் பண்ணை மகளிர் அமைக்கும் வீட்டுக் காய்கறி மற்றும் பயிர் சாகுபடி நிலங்களில் எளிதாக வேளாண் பணிகளை சிறப்பான முறையில் செய்து அதிக லாபம் பெற அரப்பு மோர் கரைசலை தயாரிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவது வாயிலாக அதிகளவு மகசூல் பெற முடியும்.
÷தயாரிக்கும் முறை: நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.
÷இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும். பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும். பின்பு ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.
÷விவசாயிகள், பண்ணை மகளிர் குறைந்த செலவில் அரப்பு மோர் கரைசலை தங்கள் வீடுகளிலேயே தயார் செய்து குறைந்த காலத்தில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற முடியும்.
÷பிற பயன்கள்: அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும்.÷குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும். அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.
÷அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.
÷எனவே குறைந்த செலவில், காலத்தில் விவசாயிகளிடம் உள்ள இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை கொண்டு எளிதாக தயாரிக்கப்படும் அரப்பு மோர் கரைசலை தமிழக விவசாயிகள் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் கூறியுள்ளார்.
நன்றி:தினமணி
 
 

காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்க யோசனை

அரக்கோணம், மார்ச் 31: தோட்டக்கலை பயிர் சாகுபடியில் தொடர்ந்து விளைச்சல் கிடைக்கும் வகையில் கால இடைவெளியை பின்பற்றி பயிர் சாகுபடி செய்தால் நல்ல விலைக் கிடைக்கும் என்று தோட்டக் கலைத் துறை காவேரிபாக்கம் உதவி இயக்குநர் பரசுராமன் கூறினார்.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் பொன்னை உபவடி நீர்ப்பகுதி விவசாயிகளுக்கான இலவச இடுபொருள் வழங்கும் விழா அரக்கோணத்தை அடுத்த காவனூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பரசுராமன் பேசியது:

காய்கறிகளை பயிர் செய்வோர் தங்களின் நிலத்தை பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பகுதியில் முதல் சாகுபடி தொடங்கிய 15 நாள் கழித்து அடுத்த பகுதியில் சாகுபடியை தொடங்க வேண்டும்.

 இந்த குறிப்பிட்ட கால இடைவெளியை பின்பற்றி சாகுபடி செய்யும் விவசாயிகளால் ஆண்டு முழுதும் காய்கறிகளை தொடர்ந்து விற்பனைச் சந்தைக்கு கொண்டுச் செல்ல முடியும்.

 இதன் மூலம் தொடர்ந்து நல்ல விலையும், வருவாயும் கிடைப்பதுடன், குறிப்பிட்ட நேரத்தில் அதிக விளைச்சல் காரணமாக விலை குறைவு பிரச்னையை சந்திக்கும் சூழல் ஏற்படாது.

  விற்பனை சந்தையின் தேவைக்கும் குறைவாக காய்கறிகள் செல்லும்போது அவற்றுக்கு உரிய விலை கிடைக்கும் என்றார் பரசுராமன்.

கூட்டத்துக்கு ஏரிபாசன சங்கத் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். காவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் சரவணன், தோட்டக்கலைத் துறை அரக்கோணம் உதவி இயக்குநர் ஜெபக்குமாரிஅனி, நெமிலி உதவி இயக்குநர் விஜயராம், காவனூர் ஏரிப்பாசன தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
நன்றி:தினமணி
 
 
 

முந்திரியில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்...

பண்ருட்டி, மார்ச் 31:   முந்திரி உற்பத்தி குறைவுக்கான முக்கிய காரணங்களை கண்டறிந்து, நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக அளவு மகசூலை பெறலாம் என பண்ருட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். 
பண்ருட்டி வட்டத்தில் சுமார் 16,900 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள முந்திரி காடுகளில் இருந்து சுமார் 12 ஆயிரம் மெட்ரிக் டன் முந்திரி கொட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.   முந்திரியில் அதிக மகசூல் பெறுவது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளது:  விதை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தோப்புகள், வயதான மற்றும் உற்பத்தி திறன் குறைந்த தோப்புகள் இருத்தல், மண் வளம், மரங்களை பராமரிப்பு செய்தல் குறைவு, உரமிடாமை, பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளாமையால் முந்திரி உற்பத்தி திறன் குறைகிறது.  
முந்திரியில் அதிக அளவு மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடியது தேயிலைக் கொசு பூச்சியாகும். இப்பூச்சியால் 25 சதவீதம் தளிர், 30 சதவீதம் பூங்கொத்து மற்றும் 15 சதவீதம் இளங்கொட்டை பருவங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. 
முந்திரி பிஞ்சுவிடும் பருவத்தில் கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.0 கிராம் வீதம் கரைத்து, இலைகள் நன்றாக நனைந்து ஒழுகும்படியும், உள்வாட்டத்தில் சிம்புகளிலும், கிளைகளிலும் பரவலாக தெளிக்க வேண்டும். 
எக்காரணம் கொண்டும் பைரித்திராய்டு மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்தக் கூடாது என பண்ருட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
நன்றி:தினமணி