வியாழன்

காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்க யோசனை

அரக்கோணம், மார்ச் 31: தோட்டக்கலை பயிர் சாகுபடியில் தொடர்ந்து விளைச்சல் கிடைக்கும் வகையில் கால இடைவெளியை பின்பற்றி பயிர் சாகுபடி செய்தால் நல்ல விலைக் கிடைக்கும் என்று தோட்டக் கலைத் துறை காவேரிபாக்கம் உதவி இயக்குநர் பரசுராமன் கூறினார்.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் பொன்னை உபவடி நீர்ப்பகுதி விவசாயிகளுக்கான இலவச இடுபொருள் வழங்கும் விழா அரக்கோணத்தை அடுத்த காவனூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பரசுராமன் பேசியது:

காய்கறிகளை பயிர் செய்வோர் தங்களின் நிலத்தை பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பகுதியில் முதல் சாகுபடி தொடங்கிய 15 நாள் கழித்து அடுத்த பகுதியில் சாகுபடியை தொடங்க வேண்டும்.

 இந்த குறிப்பிட்ட கால இடைவெளியை பின்பற்றி சாகுபடி செய்யும் விவசாயிகளால் ஆண்டு முழுதும் காய்கறிகளை தொடர்ந்து விற்பனைச் சந்தைக்கு கொண்டுச் செல்ல முடியும்.

 இதன் மூலம் தொடர்ந்து நல்ல விலையும், வருவாயும் கிடைப்பதுடன், குறிப்பிட்ட நேரத்தில் அதிக விளைச்சல் காரணமாக விலை குறைவு பிரச்னையை சந்திக்கும் சூழல் ஏற்படாது.

  விற்பனை சந்தையின் தேவைக்கும் குறைவாக காய்கறிகள் செல்லும்போது அவற்றுக்கு உரிய விலை கிடைக்கும் என்றார் பரசுராமன்.

கூட்டத்துக்கு ஏரிபாசன சங்கத் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். காவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் சரவணன், தோட்டக்கலைத் துறை அரக்கோணம் உதவி இயக்குநர் ஜெபக்குமாரிஅனி, நெமிலி உதவி இயக்குநர் விஜயராம், காவனூர் ஏரிப்பாசன தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
நன்றி:தினமணி
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக