திருவள்ளூர் : மூலிகைகளின் ராணி என பெயர் பெற்ற துளசியை பயிரிடும் விவசாயிக்கு ஒரு ஹெக்டேருக்கு 6 ஆயிரம் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படுகிறது.வைட்டமின் ஏ, சி, கால்சியம் சத்துக்கள் அதிகளவில் இருக்கும் துளசியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் இருந்து கொசு விரட்டி, கிருமி நாசினி, தலைவலி, தொண்டைப் புண், அஜீண கோளாறு, வயிற்றுப்போக்கு மலேரியா போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் பல்வேறு மருந்துகள் தயாரிப்பதால் மூலிகைகளின் ராணி என்ற பெயர் துளசிச் செடிக்கு உண்டு.நடவு முறை:பொதுவாக விதைகள் மூலம் துளசி உற்பத்தி செய்யப்படும். மேட்டுப் பாத்தியல் முறையில் விதைகள் தூவி நாற்றங்கால் அமைக்க வேண்டும். 8 முதல் 10 நாளில் விதை முளைத்து வரும். 6 வாரங்கள் தயாரான நாற்றுக்களை 40 செ.மீ. ஷ் 40 செ.மீ. என்ற இடைவெளியில் நடவு செய்து மாதத்துக்கு இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. இதற்கு மக்கிய தொழு உரம், மண்புழு உரம் மட்டுமே போதுமானது.அறுவடை: எல்லா வகை மண்ணிலும் வளரும் தன்மைக் கொண்ட துளசிச் செடியின் முதல் அறுவடை 90 முதல் 95 நாளிலும், அடுத்ததாக 60 முதல் 75 நாளிலும் அதை தொடர்ந்து ஆண்டுக்கு 3 முறை என்ற கணக்கில் அறுவடை செய்யலாம். எண்ணெய் எடுக்க அறுவடை செய்யும் போது பூக்கும் தருவாயில் அறுவடை செய்ய வேண்டும். அப்போது ஒரு ஹெக்டேருக்கு 2500 முதல் 3000 கிலோ வரை அறுவடை செய்ய முடியும்.திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலும் பூஜைகள், மாலை கட்டும் பலனுக்காக அறுவடை செய்யப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்கள், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சபரி மலை சீசனில் இம்மாவட்டத்தில் துளசியின் தேவை அதிகளவில் உள்ளது.பூஜை மற்றும் மாலை கட்ட பயன்படும் வகையில் அறுவடை செய்யப்படும் துளசி ஒரு கிலோ 25 வரை விற்கப்படுகிறது. எண்ணெய் மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்காக அறுவடை செய்யப்படும் துளசி கிலோ 40 வரை விற்கப்படுகிறது. ஆனால் எண்ணெய் எடுக்கும் விதத்தில் துளசி பயிர்கள் வட இந்தியாவில் மட்டுமே அதிகளவில் அறுவடை செய்யப்படுகிறது. தென் இந்தியாவில் எண்ணெய் பயன்பாடு அறுவடை மிகவும் குறைவாக உள்ளது. துளசி பயிர் குறித்த விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலரை 9444227095 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
நன்றி :தினமணி
Source:http://www.dinamani.com
செவ்வாய்
பயிரிடுவோம் பணம் தரும் பப்பாளி
கடலூரில் செழித்து வளர்ந்த பப்பாளி மரம்
கடலூர்: கனிகளின் சிகரம் என்றும், ஏழைகளின் ஆப்பிள் என்றும் மருத்துவர்களால் வர்ணிக்கப்படுவது பப்பாளி. பப்பாளி வெப்ப, மிதவெப்ப நாடுகளில் பயிரிடப்படுகிறது. பப்பாளிப் பழத்தில் குளுக்கோஸ், வைட்டமின்கள் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளன. பப்பாளி பழம், இலைகள், வேர்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. பப்பாளிப் பழம் உணவை, குறிப்பாக பருப்புவகை உணவுகள், இறைச்சி போன்றவற்றை எளிதில் செரிக்க வைக்கும் குணம் கொண்டது. 35 கிராம் இறைச்சியை ஒரு கிராம் பப்பாளி செரிக்க வைத்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பப்பாளிப் பழம் பித்தத்தைப் போக்கும். கல்லீரல், கணையம், சிறுநீரக நோய்களை குணப்படுத்தும். ரத்த சோகைக்கும், புற்று நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பப்பாளிக் காயில் இருந்து எடுக்கப்படும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பப்பாயின் என்ற நொதிப் பொருள் (என்ûஸம்) நிறைய மருத்துவ குணம் கொண்டது.தமிழ்நாட்டில் திண்டுக்கல், பொள்ளாச்சி, கோவை, தருமபுரி மாவட்டங்களில் வணிக ரீதியாகப் பயிரிடப்படுகின்றன. மிதவெப்ப மற்றும் வெப்பப் பிரதேசங்களில், சமவெளிகளில் களிமண் பூமியைத் தவிர மற்ற நிலங்களில் பப்பாளி நன்றாக வளரும். மலைப் பகுதிகளில், 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளிலும் வடிகால் வசதி உள்ள நிலங்களிலும் பப்பாளி வளரும். ஆண்டு முழுவதும் பப்பாளியைப் பயிரிடலாம் என்றாலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பப்பாளி பயிரிடலாம் என்று வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கிறார்கள்.பப்பாளியின் வயது 24 முதல் 30 மாதங்கள். நடவுக் காலத்தில் அதிக மழை இருக்கக் கூடாது. வேர் பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்கக் கூடாது. பப்பாளியில் கோ1, கோ2, கோ3, கோ4, கோ5, கோ6, கோ7 மற்றும் கூர்க்கனி டியூ, சூரியா போன்ற ரகங்கள் உள்ளன. இவற்றில் கோ2, கோ5, கோ6 ஆகிய ரகங்கள் சாப்பிடச் சிறந்தவை. கோ2, கோ5 பால் எடுப்பதற்கு ஏற்ற ரகங்கள். பால் எடுத்த பிறகு பழங்களைச் சாப்பிடலாம்.பப்பாளி நாற்று தயாரிக்க ஏக்கருக்கு 500 கிராம் விதை தேவை. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் சேர்த்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். தொழுஉரம் மற்றும் மணல் நிரப்பி, பாலித்தீன் பைகளில் பை ஒன்றுக்கு 4 விதை வீதம் நட்டு நாற்று தயாரிக்கலாம். 60 நாள்களில் நாற்று தயாராகிவிடும். பப்பாளி பயிரிட நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது, 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. ல 45 செ.மீ. ல 45 செ.மீ. அளவில் குழிகள் தோண்டி, மண் மற்றும் தொழுஉரமிட்டு நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கக் கூடாது. ஆண், பெண் என இருபால் தன்மை கொண்ட செடிகளை நீக்கியபின், செடி ஒன்றுக்கு 50 கிலோ தழை, மணி, சாம்பல் உரம் மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உரமிட்டு நீர் பாய்ச்ச வேண்டும். 4-வது மற்றும் 8-வது மாதங்களில் 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட், 0.1 சதவீதம் போரிக் அமிலம் கலந்து செடிகளில் தெளித்தால் மகசூல் அதிகம் கிடைக்கும் என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள்.செடிகள் பூக்கத் தொடங்கியதும் 15 அல்லது 20 செடிகளுக்கு ஒன்று வீதம் ஆண் செடிகளை விட்டுவைத்து, மற்றவைகளை அகற்றிவிட வேண்டும். கோ3, கோ7 ரகங்களில் இருபால் பூக்கள் கொண்டவைகளை மட்டும் விட்டுவிட்டு, பெண் மரங்களை நீக்கிவிட வேண்டும்.பப்பாளிக் காய்களில் இருந்து பால் எடுக்க, முதிர்ந்த காய்களில் 2 முதல் 3 இடங்களில் லேசாகக் கீறல் ஏற்படுத்தி, பாலை வடிக்க வேண்டும். அதிகாலை முதல், காலை 10 மணி வரை, 3 அல்லது 4 நாள்களுக்கு ஒருமுறை பால் எடுக்கலாம். பப்பாளிப் பாலை அலுமினியப் பாத்திரம் அல்லது ரெக்ஸின், பாலிதீன் தாள்களில் சேகரிக்கலாம். பாலை சூரிய ஒளி அல்லது 40 டிகிரி சென்டிகிரேடில் செயற்கை உலர் கருவிகளில் உலர்த்தலாம். உலர்த்தத் தாமதம் ஆனால் தரம் பாதிக்கப்படும்.ஒரு ஹெக்டேருக்கு 3 ஆயிரம் முதல் 3,750 கிலோ வரை பப்பாளி பால் கிடைக்கும். பப்பாளிப் பழங்களைவிட பப்பாளிக் காய்களில் இருந்து எடுக்கப்படும் பாலுக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஓசூர், பெங்களூர் பகுதிகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல விலை கொடுத்து வாங்குகின்றன.இதுகுறித்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர்குப்பம் கிராமத்தில் பழத்துக்காக பப்பாளி பயிரிட்டுள்ள விவசாயி ஜனார்த்தனம் கூறுகையில், "5 ஏக்கரில் பப்பாளி பயிரிட்டு இருக்கிறேன். ஏக்கருக்கு |70 ஆயிரம் வரை செலவாகிறது. |5 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைக்கிறது. கடலூர் மாவட்ட அங்காடிகளிலேயே பழங்களை விற்பனை செய்கிறேன்" என்றார்.
நன்றி :தினமணி
Source:http://www.dinamani.com
மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. அரியலூரில் இந்திய ஜனநாயக கட்சி உண்ணாவிரதம்
அரியலூர், நவ.9-
நன்றி :மாலைமலர்
Source: http://www.maalaimalar.com
அரியலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் உண்ணாவிரத பேராட்டம் நடந்தது. 60 வயதுக்கு மேற்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ., மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், பள்ளி குழந்தைகள் கடத்தலை தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வந்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.
ஜெயங்கொண்டம் அனல்மின் நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்டும். கீழபழூர் பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரியை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் அழகுமுத்து, இளைஞர் அணி செயலாளர் ரமணிகுமார் மகளிரணி செயலாளர் மாலதி மற்றும் மகாதேவன், கலியமூர்த்தி, சின்னப்பன், கணேசன் உள்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டார்கள்.நன்றி :மாலைமலர்
Source: http://www.maalaimalar.com
சனி
சோற்றுக்கற்றாழையால் பணமும் சேரும்
கடலூர்: தமிழ்நாட்டில் சோற்றுக் கற்றாழை என்று அழைக்கப்படும் மூலிகைச்-செடி அலோவரா, பெருமளவில் உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. சோற்றுக் கற்றாழையில் அலோயின், அலோசோன் என்ற வேதிப் பொருள்கள் 4 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உள்ளன. இவ்வேதிப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அலோவரா ஜெல், அழகுசாதனங்களுக்கான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து வரும் கடும் வெப்பம், காமா, எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளில் தோலை பாதுகாக்க சோற்றுக் கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது. இது தோலின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. எனவே சோற்றுக் கற்றாழையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ரசாயனப் பொருள்கள் உலகம் முழுவதும் சருமத்துக்கான லோஷன்கள், கிரீம்கள், சோப்புகள் மற்றும் ஷாம்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்தா, ஆயுர்வேத மருத்துவங்களில் இருமல், சளி, குடல் புண் ஆகியவற்றுக்கு மருந்தாகவும், தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் ஆகியவற்றுக்கு வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. வளரும் நிலை: 25 முதல் 45 செல்ஷியஸ் வெப்ப நிலையில், கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் உள்ள பிரதேசங்களில் சோற்றுக் கற்றாழை நன்கு வளரும் தன்மை கொண்டது. நல்ல வடிகால் வசதி உள்ள எல்லா வகையான நிலங்களிலும் சோற்றுக் கற்றாழை நன்றாக வளரும் என்றாலும் தரிசுமண், மணற்பாங்கான நிலங்கள், பொறைமண் நிலங்களில் சிறப்பாக வளரும் என்று வேளாண்துறை பரிந்துரைக்கிறது. இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் வறட்சியான பகுதிகளில் சோற்றுக் கற்றாழை வணிக ரீதியாகப் பயிரிடப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, தென்னாப்பிரிக்கா, இத்தாலி, கிரீஸ், உள்ளிட்ட நாடுகளில் பெருமளவு காணப்படுகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் சோற்றுக் கற்றாழையைப் பதப்படுத்தியோ, ஜெல் தயாரித்தோ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவில் தமிழ்நாடு, ராஜஸ்தான், ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் அதிகமாக சோற்றுக் கற்றாழை பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ராமநாதபுரம், நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் மாவட்டங்களில் வணிக ரீதியாக விவசாயிகள் பயிரிடுகிறார்கள். விதைகள் இல்லை: சோற்றுக் கற்றாழைப் பயிரிட ஏற்ற பருவகாலம் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஆகும். சோற்றுக் கற்றாழையில் பூக்கள் உற்பத்தியானாலும் அதன் மகரந்தங்கள் செயல் இழந்து விடுவதால், விதைகள் உருவாவது இல்லை. எனவே செடியின் பக்கக் கன்றுகளை பிரித்தெடுத்து, வளர்க்கப்படுகிறது. இதன்படி, 3 அடி இடைவெளிக்கு ஒரு கன்று வீதம், ஹெக்டேருக்கு 10 ஆயிரம் கன்றுகள் நடவேண்டும். நிலத்தை இருமுறை உழுது, ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் இட்டு, சிறு பாத்திகளில் சோற்றுக் கற்றாழை நடவேண்டும். இலை முதிர்ச்சி அடையும்போது, ஒரளவுக்கு வறட்சியான வானிலையில் இலைகளை சேகரித்தால், அதில் தரமான ஜெல் தயாரிக்க முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது. சோற்றுக் கற்றாழை இலை 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நீர்ச்சத்து கொண்டது. எனவே விரைவில் வீணாகும் தன்மை கொண்டது. எனவே வெகுவிரைவில் ஜெல் தயாரிக்க எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏக்கருக்கு 15 டன்கள் வரை இலை கிடைக்கும். புதுவை மாநிலத்தில் உள்ள சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், கடலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து அலோவராவைக் கொள்முதல் செய்கின்றன. திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி வட்டங்களில் சோற்றுக் கற்றாழைப் பயிரிட ஏற்ற தட்பவெப்ப நிலையும், தகுந்த நிலத் தன்மையும் உள்ளன. கொள்முதல் செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், அலோவரா நல்ல லாபம் தரும் பயிர் என்கிறார்கள் வேளாண் துறையினர்.
நன்றி :தினமணி
Source:http://www.dinamani.com/
பத்து ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்தவர்களுக்கும் இலவச மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்
அரியலூர், நவ. 2: தமிழக மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இணைப்புக் கோரி பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு திங்கள்கிழமை அவர் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக மின்வாரியத்தில் 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் விவசாய மின் இணைப்புக் கோரி விண்ணப்பம் செய்தவர்களுக்கு தற்போது 30 நாள்கள் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு காவிரி டெல்டா திட்டத்தின் கீழ், சுமார் 1500 விவசாயிகள் மின் இணைப்பு பெறுவதற்கு மோட்டார் பம்பு செட் வாங்கி திருமானூர், திருமழப்பாடி, கீழப்பழூர், ஏலாக்குறிச்சி, சுத்தமல்லி, தா. பழூர் ஆகிய உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் தயார் நிலையில் பதிவு செய்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணப்பம் செய்தவர்களாவர். எனவே, இவர்களுக்கும் தமிழக அரசின் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்க வேண்டும். ஜயங்கொண்டம் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில், நிலக்கரி திட்டத்துக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களுக்கு தற்போதைய திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என்பதால், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய தொகையை தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்."சிமென்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்தோரின் குடும்பத்தினருக்கு பணிவாய்ப்பு பெற்றுத் தருவோம்'உடையார்பாளையம், நவ. 2:சிமன்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்தோரின் வாரிசு தாரர்களுக்கு பணிவாய்ப்பு பெற்றுத் தருவோம் என்றார் தமிழர் நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுபா. இளவரசன்.தமிழர் நீதிக்கட்சியில், செந்துறை ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் இணையும் விழா செந்துறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி தமிழர் நீதிக் கட்சியில் இணைந்த, புதிய உறுப்பினர்களுக்கு கட்சியின் சால்வைகளை அணிவித்து அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுபா. இளவரசன் பேசியது: அரியலூர் மாவட்டத்திலுள்ள கனிம வளங்களை சுரண்டும் விதத்தில், சிமென்ட் ஆலை தொழிலதிபர்கள், ஏழைகளின் விளை நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, அரியலூரைச் சுற்றி 7 புதிய சிமென்ட் ஆலைகளை அமைத்துள்ளனர். இந்த ஆலைகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆலைகளுக்காக நிலம் கொடுத்தோர்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது சிமென்ட் மூட்டைகளின் விலைகளை உயர்த்தியுள்ளனர். இதனால், கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தனியார் சிமென்ட் ஆலைகளில், மண்ணின் மைந்தர்களுக்கும், ஆலைக்காக நிலம் கொடுத்தோர்க்கும் பணி வாய்ப்பு பெற்றுத்தர தமிழர் நீதிக் கட்சி தொடர்ந்து பாடுபடும் என்றார் அவர். விழாவுக்கு கட்சியின் மாவட்டச் செயலர் க. சம்பத் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் சி. மதியழகன், மாவட்ட தொழில் சங்கச் செயலர் முருகேசன், மாவட்டத் தலைவர் பெ. ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாநில செய்தி தொடர்பாளர் மணிவண்ணன், மாநில கொள்கை பரப்புச் செயலர் கொளஞ்சி, துணைப் பொதுச் செயலர் இரா. பாக்கியராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கட்சியின் ஒன்றியச் செயலர் ஏகாம்பரம் வரவேற்றார். செந்துறை நகரச் செயலர் த. வேல்முருகன் நன்றி கூறினார்.
நன்றி :தினமணி
source:http://www.dinamani.com/
நன்றி :தினமணி
source:http://www.dinamani.com/
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)