அரியலூர், நவ. 2: தமிழக மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இணைப்புக் கோரி பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு திங்கள்கிழமை அவர் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக மின்வாரியத்தில் 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் விவசாய மின் இணைப்புக் கோரி விண்ணப்பம் செய்தவர்களுக்கு தற்போது 30 நாள்கள் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு காவிரி டெல்டா திட்டத்தின் கீழ், சுமார் 1500 விவசாயிகள் மின் இணைப்பு பெறுவதற்கு மோட்டார் பம்பு செட் வாங்கி திருமானூர், திருமழப்பாடி, கீழப்பழூர், ஏலாக்குறிச்சி, சுத்தமல்லி, தா. பழூர் ஆகிய உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் தயார் நிலையில் பதிவு செய்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணப்பம் செய்தவர்களாவர். எனவே, இவர்களுக்கும் தமிழக அரசின் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்க வேண்டும். ஜயங்கொண்டம் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில், நிலக்கரி திட்டத்துக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களுக்கு தற்போதைய திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என்பதால், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய தொகையை தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்."சிமென்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்தோரின் குடும்பத்தினருக்கு பணிவாய்ப்பு பெற்றுத் தருவோம்'உடையார்பாளையம், நவ. 2:சிமன்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்தோரின் வாரிசு தாரர்களுக்கு பணிவாய்ப்பு பெற்றுத் தருவோம் என்றார் தமிழர் நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுபா. இளவரசன்.தமிழர் நீதிக்கட்சியில், செந்துறை ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் இணையும் விழா செந்துறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி தமிழர் நீதிக் கட்சியில் இணைந்த, புதிய உறுப்பினர்களுக்கு கட்சியின் சால்வைகளை அணிவித்து அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுபா. இளவரசன் பேசியது: அரியலூர் மாவட்டத்திலுள்ள கனிம வளங்களை சுரண்டும் விதத்தில், சிமென்ட் ஆலை தொழிலதிபர்கள், ஏழைகளின் விளை நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, அரியலூரைச் சுற்றி 7 புதிய சிமென்ட் ஆலைகளை அமைத்துள்ளனர். இந்த ஆலைகளில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆலைகளுக்காக நிலம் கொடுத்தோர்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது சிமென்ட் மூட்டைகளின் விலைகளை உயர்த்தியுள்ளனர். இதனால், கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தனியார் சிமென்ட் ஆலைகளில், மண்ணின் மைந்தர்களுக்கும், ஆலைக்காக நிலம் கொடுத்தோர்க்கும் பணி வாய்ப்பு பெற்றுத்தர தமிழர் நீதிக் கட்சி தொடர்ந்து பாடுபடும் என்றார் அவர். விழாவுக்கு கட்சியின் மாவட்டச் செயலர் க. சம்பத் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் சி. மதியழகன், மாவட்ட தொழில் சங்கச் செயலர் முருகேசன், மாவட்டத் தலைவர் பெ. ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாநில செய்தி தொடர்பாளர் மணிவண்ணன், மாநில கொள்கை பரப்புச் செயலர் கொளஞ்சி, துணைப் பொதுச் செயலர் இரா. பாக்கியராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கட்சியின் ஒன்றியச் செயலர் ஏகாம்பரம் வரவேற்றார். செந்துறை நகரச் செயலர் த. வேல்முருகன் நன்றி கூறினார்.
நன்றி :தினமணி
source:http://www.dinamani.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக