புதன்

ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படுமா?





ஜெயங்கொண்டம்,மே 16:அரியலூர் மாவட்ட மக்களின் மிகப் பெரிய வாழ்வாதாரத் திட்டமான அனல் மின் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டி, பணிகளை விரைவில் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் பகுதியில் 80 அடி முதல் 330 அடி வரை தரமான பழுப்பு நிலக்கரி படிமம் சுமார் 115 கோடி  டன்னுக்கு மேல் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதைப் பயன்படுத்தி அனல் மின் திட்டம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அறிவிப்பை,கடந்த 1989 ஆம் ஆண்டு திமுக அரசின் அன்றைய மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வெளியிட்டார்.
இந்தத் திட்டத்துக்காக ஜெயங்கொண்டத்தைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் இருந்து 8,473 ஏக்கர் நன்செய் நிலங்களும் 1,053 ஏக்கர் புறம்போக்கு மற்றும் நத்தம் புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.
1991 ஆம் ஆண்டு மாநில அரசின் டிட்கோ நிறுவனம் மூலம் சுமார் ரூ.63 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தைக் கைவிடும் நிலை உருவானது.இந்நிலையில்,மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் முயற்சியால்,இந்தத் திட்டம் மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மூலம் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டு, இதற்கென மத்திய அரசு மூலம் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுநாள் வரை 11,489 நில உரிமையாளர்களில் 10,325 பேருக்கு இழப்பீட்டுத் தொகையாக ஓர் ஏக்கருக்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை மொத்தம் ரூ.36 கோடியே 60 லட்சத்து 78 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள பெண்ணாடம்,தனவாய் போன்ற கிராமங்களில் ஓர் ஏக்கருக்கு பல லட்சம் ரூபாய் வழங்கி,தனியார் சிமென்ட் ஆலைகள் நிலங்களைத் தன்வசப்படுத்தி உள்ளன.
இதை ஒப்பிட்டு இழப்பீட்டுத் தொகையை இன்றைய சந்தை மதிப்புக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும். மேலும்,நிலம் கொடுத்தோரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு,வீடுகளை இழந்தவர்களுக்கு அடிப்படை  வசதிகளுடன் கூடிய வீடுகள்,கல்விக் கூடங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அனைத்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம்,உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில்,கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைக் கடுமையாக எதிர்த்து,பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு,நிலம் இழந்தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு தான் ஒருபிடி மண்ணைக்கூட அள்ள முடியும் என்று  கூறி​னர்.
இழப்பீட்டுத் தொகை அதிகமாக்கப்பட வேண்டும் என்று 9,882 விவசாயிகள் வழக்குத்  தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளை  விசாரிக்க அரசு சார்பில், இரு சார்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு வழக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே,ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து,பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான சுரங்கப் பணி,அனல் மின் திட்டப் பணிகளை எவ்வித இடையூறும் இன்றி தொடங்கி,மின் பற்றாக்குறையைப் போக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி:தினமணி
Source : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Trichy&artid=243292&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=ஜயங்கொண்டம் அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக