புதன்

ஜெயங்கொண்டம் மின் திட்டத்திற்கு நிலக்கரி எடுக்க வேண்டும் என்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும்

ஜெயங்கொண்டம்: வன்னியர்கள் வன்னியர்களுக்கு மட்டுமே, குறிப்பாக பாமகவுக்கு மட்டுமே ஒட்டு போட்டால் தமிழகத்தில் உள்ள 120 சட்டசபை தொகுதிகளில் பாமக வெற்றிக் கனியை பறித்து ஆட்சியை பிடிக்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் [^] கூறியுள்ளார்.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டும், சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி வலியுறுத்தியும் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட வன்னியர் சங்க மாநாடு ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,

ஜெயங்கொண்டம் மின் திட்டத்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை அந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

கையகப்படுத்திய நிலத்திற்கு ஒரு ஏககருக்கு ரூ.25 ஆயிரம் மட்டும் அரசு விலை வழங்கியுள்ளது. இந்த செயல் கண்டனத்திற்கு உரியது.

இங்கு நிலக்கரி எடுக்க வேண்டும் என்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலக்கரிஎடுக்க அனுமதிக்க மாட்டோம். அதற்காக எந்த போராட்டத்தையும் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

தமிழகத்தில் உள்ள 6 கோடி பேரில் 2 கோடி பேர் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றிக் கனியை பறித்து ஆட்சியை பிடிக்கலாம். இதற்கு அனைத்து வன்னியர்களும் ஒன்று சேர வேண்டும்.

1987 -ல் போராட்டம் நடத்தி மற்ற சாதிகளுடன் இணைந்து 20 சதவீத இடஒதுக்கீடு பெற்றோம்.ஆனால் அதில் 7 சதவீதம் கூட நமக்கு பலன் கிடைக்கவில்லை.

வன்னியர்களுக்கு என தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அறவழியில் போராட்டம் நடத்தி சிறை செல்ல 20 வயது முதல் 30 வயது வரையுள்ள ஒரு லட்சம் இளைஞர்கள் தயாராக வேண்டும்.

சிறையில் இருந்து வெளியில் விட்டாலும் மீண்டும் அதே போராட்டத்தை நடத்தி சிறைக்கு செல்ல வேண்டும்.