வியாழன்

துல்லியப் பண்ணையில் வாழை விவசாயம்! ஹெக்டேருக்கு ரூ.3.50 லட்சம் வரை லாபம்



கடலூர்: தமிழ்நாட்டில் 83 ஆயிரம் ஹெக்டேரில் வாழை பயிரிடப்படுகிறது. திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களில் வாழை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்படுகிறது. உலக அளவில் 72.5 மில்லியன் டன் வாழைப் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் இந்தியாவின் பங்கு 21.77 சதவீதம். தமிழ்நாட்டில் பூவன், மொந்தன், ஏலக்கி, செவ்வாழை, பச்சநாடன், கற்பூரவல்லி, நேந்திரம் போன்ற வாழை ரகங்கள் அதிகம் பயிரிடப்படுகிறது.ஏக்கருக்கு 1,000 வாழைக் கன்றுகள் நடப்படுகிறது. நாளொன்றுக்கு ஒரு வாழை மரத்துக்கு 20 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. விவசாயிகள் தற்போது வாரம் ஒரு முறை அல்லது 5 நாள்களுக்கு ஒருமுறை வாழைக்கு தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். இதனால் தண்ணீர் செலவு மிகஅதிகம். தேவையை விட 5 மடங்கு தண்ணீர் செலவழிக்கப்படுவதாக, வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.துல்லிய பண்ணை விவசாயத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் செலவை ஐந்தில் ஒரு பகுதியாகக் குறைக்க முடியும், அதனால் உற்பத்தியை 40 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முடியும் என்பதும் வேளாண்துறையின், புதிய தொழில்நுட்ப ஆலோசனைகள்.வேளாண் தொழிலுக்கு ஆள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுவரும் இந்தக் காலத்தில், சொட்டுநீர் பாசனம் முறையை கடைப்பிடிப்பதால் வேலையாள்களின் தேவை பெருமளவுக்குக் குறைந்துவிடும். தேவைக்கு ஏற்ப சிக்கனமாக  உரமிட முடியும். தனியாக சேமிப்புத் தொட்டி ஒன்றை அமைத்து, உரத்தை அதன்மூலம் சொட்டுநீர் பாசனக் குழாய்கள் வழியாகவே பயிருக்கு அளித்துவிட முடியும்.தமிழ்நாட்டில் வாழை விவசாயத்தில் துல்லியப் பண்ணை விவசாய தொழில்நுட்பம் 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் துல்லியப் பண்ணை விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. துல்லியப் பண்ணை விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மானியமும் அதிக அளவில் வழங்கப்படுகிறது.மானியம் இதுகுறித்து கடலூர் தோட்டக் கலைத்துறை வேளாண் துணை இயக்குநர் கனகசபை கூறுகையில், ""துல்லியப் பண்ணை விவசாயம் மேற்கொண்டால், வாழைப் பயிருக்கு ஹெக்டேருக்கு மத்திய அரசு மானியம் ரூ.37,440-ம், மாநில அரசு மானியம் ரூ.11,200 மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள உரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.பாரம்பரிய விவசாயத்தில் வாழைப் பயிரில் ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் நிகர லாபம் கிடைக்கிறது. ஆனால் துல்லியப் பண்ணை விவசாயம் மூலம் ரூ.3.58 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.  ஜெர்மனி போன்ற மேலை நாடுகளில் வாழை விவசாயம் புதிய தொழில் நுட்பங்களுடன் அதிக லாபம் ஈட்டும் சிறந்த தொழிலாக மாற்றப்பட்டு இருக்கிறது.மேலை நாடுகளில் வாழைத்தார்கள் இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்பட்டு, நேராக சேமிப்புக் கிடங்குகளுக்குச் சென்று விடுகின்றன. அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ப பழுக்க வைக்கப்பட்டு, சூப்பர் மார்கெட்டுகளுக்கு பாதுகாக்கப்பட்ட கன்டெய்னர்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் நுகர்வோருக்கு எப்போதும் புதிய வாழைப் பழங்கள் கிடைக்கின்றன. அதே நேரத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வாழைப் பழங்கள், தேவைக்கு ஏற்ப மட்டுமே பழுக்க வைக்கப்பட்டு, சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.இதனால் வாழை விவசாயிகளுக்கு ஒரே சீரான விலை கிடைக்கிறது. அத்தகைய புதிய தொழில் நுட்பங்களுக்கு தமிழக விவசாயிகளும் மாறவேண்டும். அதற்கு முதல் கட்டமாக துல்லிய பண்ணை விவசாயத்தை செயல்படுத்த வேண்டும்'' என்றார்.புதிய தொழில்நுட்பம்வாழை விவசாயத்தில் மகசூலாக வாழைப் பழத்தை மட்டுமே விவசாயிகள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். வாழை மட்டைகளில் இருந்து காகிதம், நார்களை பயன்படுத்தி பைகள் உள்ளிட்ட கலைப்பொருள்கள் தயாரிக்க முடியும். வாழைத் தண்டில் இருந்து எடுக்கப்படும் சாறு, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கல் போன்றவற்றுக்கு  நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. வாழைத் தண்டு மற்றும் பூவில் இருந்து ஜாம் தயாரித்து விற்பனை செய்ய முடியும் என்றும் வாழையில் புதிய தொழில்நுட்பங்கள் தெரிவிக்கின்றன.வாழைப் பழங்களை ஜாம், பெüடர் ஆகவும்  தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும் என்றும் வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கான தொழில்நுட்பப் பயிற்சி திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில் அளிக்கப்படுகிறது.துல்லியப் பண்ணை விவசாயம் குறித்து கடலூர் ராமாபுரம் முன்னோடி வாழை விவசாயி ஞானசேகரன் கூறுகையில், ""சூறாவளிக் காற்று ஏற்படாவிட்டால் கடலூர் மாவட்டத்தில் வாழை விவசாயம் லாபகரமானது. தண்ணீர் தேவையை குறைக்கவும், வேளாண் தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில் துல்லியப் பண்ணை விவசாயத்தைப் பின்பற்றி, சொட்டு நீர் பாசனம் முறையை ஒரு ஹெக்டேரில் பின்பற்ற முடிவு செய்து இருக்கிறேன். இதன்மூலம் 40 சதவீதம் மகசூல் அதிகரிக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

நன்றி : தினமணி 

Source: http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=303751&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!%20%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%82.3.50%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக