சனி

ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்

ஜெயங்கொண்டம், செப். 1: ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை அரசு உடனே தொடங்க வேண்டும் என்றார் தமிழர் நீதிக் கட்சியின் நிறுவனர்  தலைவர் சுபா. இளவரசன்.  ஜெயங்கொண்டத்தில் தமிழர் நீதிக் கட்சியின் சார்பில்   புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, சுபா. இளவரசன் பேசியது:    நிலக்கரி மின் திட்டம் தொடங்குவதாக  அறிவிக்கப்பட்டு, 18 சிற்றூர்களின் நிலங்கள் திட்ட  அலுவலகத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலையில், 15  ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள இத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். நிலக்கரி திட்டத்தில் நிலமிழக்கும் அனைத்து மக்களையும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக்க வேண்டும்.    சொத்துகளை இழக்கும் மக்களுக்கு ஏக்கருக்கு | 10  லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும். அந்தப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படும் அனைத்து மக்களுக்கும்  கல்வி, மருத்துவம், போக்குவரத்து, குடிநீர் போன்ற வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் அமைத்துத் தர வேண்டும். அமைக்கப்படும் குடியிருப்புகள் மின் திட்ட வளாகத்துக்குள் வர வேண்டும்.   இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் அனைவருக்கும்  அவரவர் தகுதிக்கேற்ப நிறுவனத்தில் வேலை வழங்க  வேண்டும். நிலக்கரி திட்டத்துக்குத் தேவையான தொழில்பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்று காரணம் காட்டி இப் பகுதி  மக்களுக்கு வேலை மறுப்பதை தவிர்க்க முன்னேற்பாடாக,  இந்தப் பகுதியிலேயே ஓர் தொழில்பயிற்சி நிலையம் அமைத்து  நிலமிழக்கும் குடும்பங்களுக்குத் தேவையான தொழில்பயிற்சியை அளிக்க வேண்டும்.   இத் திட்டத்தால் நிலம் வழங்கியுள்ள குடும்பங்களுக்கு  வேலை கொடுத்ததுபோக, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களிலுள்ள தகுதியுடைய அனைவருக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.   நிலமிழக்கும் விவசாயிகள் அனைவரின் அனைத்து அரசுக்  கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.    நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து வெளியாகும் நீரை வறண்டப்  பகுதி விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இத் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.    இத் திட்டத்தால் பாதிக்கப்படும் நிலமற்ற கூலித்  தொழிலாளர்களுக்கும், நெசவுத் தொழிலாளர்களுக்கும் உரிய  முன்னுரிமை வழங்க வேண்டும்.    கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அரசின்  சலுகைகளைப் பெறமுடியாத நிலையில், அப் பகுதி  மக்களுக்கு இடைக்கால இழப்பீட்டுத் தொகையை இந் நிறுவனம் வழங்க வேண்டும். மேலும், இந்தத் திட்டம்  தொடர்பாக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்றார் இளவரசன்.      ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலர் (மே)இரா. அறிவழகன், ஆண்டிமடம் ஒன்றியச் செயலர் மகேசன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் மு. செல்வம், மாநிலப் பொருளர் கருப்புசாமி, மாநில கொள்கைப் பரப்புச் செயலர் கொளஞ்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் நகரச் செயலர்  கலியமூர்த்தி நன்றி கூறினார்.     ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கோரிக்கைகள் அடங்கிய தீர்மான நகலை ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்ட தனி  வட்டாட்சியர் உதயகுமாரிடம், சுபா. இளவரசன் வழங்கினார்.

நன்றி :தினமணி 

Source: http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=297001&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக