சேலம் இரும்பாலைக்கு நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய இரும்புத்துறை அமைச்சர் வீரபத்ர சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: சேலத்தில் உள்ள இரும்பாலைக்கு 4,000 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு ஆலை உருவாக்கப்பட்டது. நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உறுதி அளித்ததன்பேரில் மக்கள் நிலம் வழங்கினார்கள்.
இதற்காக சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகமும் அமைக்கப்பட்டது. ஆலைக்கு நிலம் கொடுத்தவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு கடந்த மாதம் 3 மற்றும் 27ம் தேதிகளில் ஆலை முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஏற்பாட்டின்படி நிலம் கொடுத்த மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தொகுதி எம்.எல்.ஏ. ராஜா, அரசு அதிகாரிகள் இரும்பாலை நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
அப்போது கீழ்க்கண்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்:
1. இரும்பாலையில் வேலை வழங்க சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகம் தொடங்க வேண்டும்.
2. அனைத்து வேலை வாய்ப்புகளும் இதன் மூலமே நிரப்பப்பட வேண்டும்.
3. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இதற்கான வயது உச்ச வரம்பை 35 ஆக உயர்த்த வேண்டும்.
4. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குடியிருப்புகளை பணி காலத்துக்கு மட்டுமே வழங்க வேண்டும். 99 வருட காலம் என்று இருப்பதை ரத்து செய்ய வேண்டும்.
5. தற்போது 78 பேரை நியமனம் செய்து நடத்தப்படும் நேர்முகத் தேர்வை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தனர்.
அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் 78 பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு நிலம் கொடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்,
கல்வித் தகுதி அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்து பொகாரோ இரும்பு ஆலை, விசாகப்பட்டினம் இரும்பு ஆலை ஆகியவற்றில் வேலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
மேலும் வயது வரம்பில் தமிழக அரசின் வேலை வாய்ப்பு கொள்கைகளை பின்பற்ற வேண்டும், சேலம் வேலைவாய்ப்பு அலுவலகப் பட்டியலை மட்டுமே பயன்படுத்த வேண்டும், தகுதியான ஆட்கள் கிடைக்காதபட்சத்தில் மட்டும் மாநில அளவில் தேர்வு செய்ய வேண்டும்.
எனவே, இதற்குரிய உத்தரவைப் பிறப்பித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
நன்றி:Thatstamil
Source: http://thatstamil.oneindia.in/news/2010/05/01/workers-support-dmk-government-stalin.html
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக