வெள்ளி

பண்டிகைக் கால பயிர்களில் லாபம் பார்க்கும் விவசாயிகள்

கம்பு, கேழ்வரகு கதிர்களை விற்பனைக்காக கத்தைகளாகத் தயார் செய்யும் பணி.
புதுச்சேரி,  செப்.  9:  புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயிகள் விநாயகர் சதுர்த்திக்காக பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.விநாயகர் சதுர்த்தி விழா பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது பழங்களுடன், தானியங்களின் கதிர்கள் விநாயகருக்குப் படைக்கப்படுகின்றன. அதற்கு முன்பு கம்பு, கேழ்வரகு போன்ற தானிய கதிர்களைத் தேடிக் கொண்டு வீட்டில் வைத்துப் படைத்தனர்.இப்போது அதற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லை. மேலும் அது எங்கு கிடைக்கும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. அதிலும் நகரப் பகுதிகளில் இருப்பவர்கள் கிடைக்கும் பொருளைக் காசு கொடுத்து வாங்கிச் செல்ல தயாராகி விட்டனர். இதைப் பயன்படுத்தி விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் மற்றும் அன்றைய தினம் படைப்பதற்கான பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.10 ஆண்டுகளாக கம்பு, கேழ்வரகு சாகுபடி செய்து வந்த புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி து. பாண்டுரங்கன், இந்த ஆண்டு முதல் முதலாக விநாயகர் சதுர்த்தி விழாவைக் கருத்தில் கொண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். 2 நாள்களுக்கு முன்பு இதை வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றுள்ளனர்.அரை காணி அளவில் அவர் இதைச் சாகுபடி செய்துள்ளார். மழையின் காரணமாக இந்த ஆண்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மக்காச்சோளம் ஒரு கதிர் ரூ.1 என்ற விலையில் வியாபாரிகளிடம் கொடுத்துள்ளார். ஒரே வியாபாரி இவரிடம் இருந்த 7,175 கதிர்களையும் வாங்கிச் சென்றுள்ளார். 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட கதிர்கள் இருந்தாலும் வியாபாரிகள் வாங்கிச் செல்ல தயாராக இருக்கின்றனர் என்றார் பாண்டுரங்கன்.10 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்திக்காக கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து வரும் சரசு, நேரடியாக புதுச்சேரி மார்க்கெட் பகுதியில் இதைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருவதாகக் கூறுகிறார். நேரடியாக விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கும் என்று சொல்கிறார்.அவரது மகன் பார்த்திபன் கூறுகையில், உண்மையில் விநாயகர் சதுர்த்திக்காகச் சாகுபடி செய்து இது போன்று விற்பனை செய்வதால் நல்ல லாபம் கிடைக்கிறது. எங்கள் வயலில் இன்னும் அறுவடை செய்யவில்லை. வியாழக்கிழமை பிற்பகல் அறுவடை செய்து வெள்ளி, சனிக்கிழமை மார்க்கெட்டுக்குக் கொண்டு செல்ல உள்ளோம். இந்த ஆண்டு மழையின் காரணமாக ஓரளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது என்பதை கணக்கிட்டு சரியாக 3 மாதத்துக்கு முன்புதான் கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்வோம். 3 மாதத்தில் பெரிய அளவில் இது போன்ற சாகுபடியால் பணம் பார்க்க முடிகிறது.  எங்கள் வயலில் நாவற்பழம் மரமும் இருக்கிறது. இந்த ஆண்டு ஏற்கெனவே பழங்கள் விற்பனை செய்து முடிந்துவிட்டன என்றார்.14 ஆண்டுகளாக இது போன்ற சாகுபடி செய்து வருகிறேன். இத்தனை ஆண்டுகளாக இது போன்ற சாகுபடி எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. ஆனால் இந்த ஆண்டு பெய்த மழையால் எங்களுக்கு நஷ்டமாகதான் இருக்கும். விநாயகர் சதுர்த்தி முடிந்தால்தான் அது தெரியவரும். எங்களிடம் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் ஒரே நாளில் 3 மடங்கு அளவுக்கு லாபம் பார்க்கின்றனர் என்றார் விவசாயி வி. சிவராமன்.வயலில் கம்பு, கேழ்வரகு அறுவடை செய்து கொண்டிருந்த அவர், அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்காக மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம் என்ற யோசனையில் இருப்பதாகத் தெரிவித்தார்.கம்பு ஒரு கதிர் ரூ.1 என்ற விலையிலும், கேழ்வரகு 50 பைசா என்ற விலையிலும் இப்போது விற்பனை செய்துள்ளதாகவும், மழையின் காரணமாக கம்பு மற்றும் கேழ்வரகு திடமாக இல்லை என்றும் அவர் கூறினார்.இவருடைய மனைவி தில்லையம்மாள் கூறுகையில், இத்தனை ஆண்டுகளாக நாங்கள் சாகுபடி செய்யும் கம்பு கதிரின் மேனி அழகாக இருக்கும். இந்த ஆண்டு எங்கள் மழை பழிவாங்கிவிட்டது. இல்லையென்றால் உண்மையில் நல்ல லாபம்தான் கிடைக்கும் என்றார்.

நன்றி :தினமணி 


source:http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=300776&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக