வெள்ளி

லாபம் தரும் தேனீ வளர்ப்பு


சிதம்பரம், பிப். 17: சுற்றுச்சூழலை பாதிக்கச் செய்யாமல், குறைந்த அளவு மனித உழைப்பில் அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு பற்றி சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், தொழில் முனைவோர் தெரிந்து கொள்வது அவசியம்.
தேனீக்கள் வகையும், வாழ்க்கை முறையும்: உலகம் முழுவதும் பலவகைத் தேனீக்கள் உள்ளன. குறிப்பாக நமது நாட்டில் மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, கொசுத் தேனீ, இத்தாலியத் தேனீ என ஐந்து வகை தேனீக்கள் உள்ளன. இதில் இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ மற்றும் கொசுத் தேனீ மட்டுமே மனிதர்கள் பராமரித்து வளர்க்கக் கூடியவை.
தேனீ குடும்பம் ஒன்றில் ஒரு ராணித் தேனீயும், நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்களும், ஆயிரக்கணக்கான வேலைக்காரத் தேனீக்களும் இருக்கும். இதில் ராணித்தேனீ கூட்டுத் தலைவி. இது மூன்று ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. முட்டை இடுவது மட்டும்தான் இதன் முக்கிய வேலை. இனப்பெருக்கம் செய்வதுதான் ஆண் தேனீக்களுக்கு முக்கிய வேலை. இதன் வாழ்நாள் 2 மாதங்கள். ÷வேலைக்காரத் தேனீக்கள் அயராமல் பாடுபட்டுக் கொண்டே இருக்கும். இவையும் 2 மாதங்கள்தான் வாழும். தேன் சேகரித்தல், கூட்டைப் பராமரித்தல், இளம் தேனீக்களுக்கு உணவு ஊட்டுதல் என அத்தனை வேலைகளையும், இந்த வேலைக்காரத் தேனீக்கள்தான் செய்யும். உணவை சேகரிப்பதற்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.
ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் உள்ள பயிர்களின் விளைச்சலைக் கூட்ட  ஏக்கருக்கு 2 தேனீப் பெட்டிகள் வைக்கலாம். தேனீ வளர்ப்பை முழுநேரத் தொழிலாக செய்ய வருப்பவர்கள் ஏக்கருக்கு 50 பெட்டிகள் வரை வைத்து வளர்க்கலாம். ÷தேனீக்களின் மூலம் நடைபெறும் அயல் மகரந்தச் சேர்க்கையால் பழப்பயிர்களில் 50 சதவீதம் வரையிலும், எண்ணெய் வித்து பயிர்களில் 80 சதவீதம் வரையிலும், தென்னையில் 30 சதவீதம் வரையிலும் விளைச்சல் கூடுதலாக கிடைக்கின்றன.
மேலும் பருத்தி, சூரியகாந்தி, கம்பு, எள் மற்றும் பயிறுவகைப் பயிர்களில் இரட்டிப்பு மகசூல் கிடைக்கிறது. தேனீ வளர்ப்பதற்கு முன்பு சரியான இனத்தை விவசாயிகள் தேர்வு செய்ய வேண்டும்.
இத்தாலியத் தேனீயானது சூரியகாந்தி, கம்பு, சோளம் போன்ற மதுரம் அதிகம் கிடைக்கும் பயிர்கள் உள்ள இடங்களில் மட்டுமே வளர்க்க ஏற்றவை.
இந்தத் தேனீ 20 நாள்களுக்கு ஒருமுறை நகரும் தன்மை கொண்டது. எனவே இதனை சமாளிப்பது கடினம். எனவே விவசாயிகள் கூடுமானவரை அடக்கமான இந்தியத் தேனீயை தேர்வு செய்து வளர்க்கலாம்.
டிசம்பர் முதல் ஏப்ரல் வரை 5 மாதங்களில்தான் அதிக பூக்கள் பூக்கும். அப்போது தேனீக்கள் அதிகளவு மகரந்தத்தை சேர்த்து தேனாக மாற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை மட்டும் தேன் சேகரிப்பு மிகவும் குறைவாக இருக்கும். தீபாவளி நேரத்தில் அடைமழை பெய்யும் போது தேனீக்களுக்கு உணவு கிடைக்காது அத்தகைய சமயத்தில் ஒரு பங்கு சர்க்கரையை 2 பங்கு தண்ணீரில் கலந்து ஒரு கொட்டாங்கச்சியில் வைத்தால் அதை தேனீக்கள் உண்ணும். விவசாயிகள் தோட்டங்களில், வயல்களில் தேனீக்களை வளர்க்கும் போது பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. இதனால் தேன்கூடு அழிந்துவிடும்.
சில முக்கிய தேவைகள்: தேனீ வளர்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் தேனீக்கள் வளர்த்து வரும் பண்ணைக்கு நேரடியாகச் சென்று அதற்கான வேலைகளை பழகிக் கொள்ள வேண்டும். இதன் வாயிலாக எளிய தீர்வுகள், தேனீக்கள் கொட்டிவிடும் என்ற பயம் தெளிதல், உணர்வுப்பூர்வமாக அவற்றை எளிதில் கையாளுதல் போன்ற அனுபவம் ஏற்படும். தேனீக்கள் மனிதர்களை கொட்டினால் முடக்குவாதம், நரம்புத்தளர்ச்சி உள்ளிட்ட பல நோய்களுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தேனீக்கள் கொட்டினால் பயப்படத் தேவையில்லை.
முதலீடும், லாபமும்: தற்போதைய வேளாண் சந்தையில் ஒரு தேன் பெட்டியின் விலை ரூ.900, தேன் எடுக்கும் இயந்திரத்தின் விலை ரூ.800. தேனீக்களை விரட்டப் பயன்படும் புகைப்பானின் விலை ரூ.250. எத்தனை பெட்டிகளை விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் வைத்திருந்தாலும் ஒரு தேன் எடுக்கும் இயந்திரம் மற்றும் புகையான் இயந்திரம் இருந்தாலே போதுமானது.
ஒரு தேன் பெட்டியிலிருந்தும் மாதந்தோறும் சராசரியாக இரண்டரை கிலோ தேன் கிடைக்கும். ஒரு ஏக்கரில் உள்ள 50 பெட்டிகளில் இருந்து சராசரியாக 100 கிலோ வரை தேன் கிடைக்கும். இதன்மூலம் ரூ.17 ஆயிரம் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.  தேன் மட்டுமல்லாமல் தேன் மெழுகு, தேன்பால், தேன் பிசின், தேன் விஷம் போன்ற பல பொருள்களின் விற்பனை வாயிலாக அதிக லாபம் பெற முடியும்.
ஆடு, மாடுகளைக் கூட தீவனம் கொடுத்து பராமரிப்பது கடினம். தேனீக்களை குறைந்த செலவில் வளர்த்து அதிக லாபம் பெற முடியும். எனவே தமிழக விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு அதிக மகசூல் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமணி
Source:http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=198898&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=லாபம் தரும் தேனீ  வளர்ப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக