புதன்

ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படுமா?





ஜெயங்கொண்டம்,மே 16:அரியலூர் மாவட்ட மக்களின் மிகப் பெரிய வாழ்வாதாரத் திட்டமான அனல் மின் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டி, பணிகளை விரைவில் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் பகுதியில் 80 அடி முதல் 330 அடி வரை தரமான பழுப்பு நிலக்கரி படிமம் சுமார் 115 கோடி  டன்னுக்கு மேல் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதைப் பயன்படுத்தி அனல் மின் திட்டம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அறிவிப்பை,கடந்த 1989 ஆம் ஆண்டு திமுக அரசின் அன்றைய மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வெளியிட்டார்.
இந்தத் திட்டத்துக்காக ஜெயங்கொண்டத்தைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் இருந்து 8,473 ஏக்கர் நன்செய் நிலங்களும் 1,053 ஏக்கர் புறம்போக்கு மற்றும் நத்தம் புறம்போக்கு நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.
1991 ஆம் ஆண்டு மாநில அரசின் டிட்கோ நிறுவனம் மூலம் சுமார் ரூ.63 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தைக் கைவிடும் நிலை உருவானது.இந்நிலையில்,மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் முயற்சியால்,இந்தத் திட்டம் மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மூலம் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டு, இதற்கென மத்திய அரசு மூலம் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுநாள் வரை 11,489 நில உரிமையாளர்களில் 10,325 பேருக்கு இழப்பீட்டுத் தொகையாக ஓர் ஏக்கருக்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை மொத்தம் ரூ.36 கோடியே 60 லட்சத்து 78 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள பெண்ணாடம்,தனவாய் போன்ற கிராமங்களில் ஓர் ஏக்கருக்கு பல லட்சம் ரூபாய் வழங்கி,தனியார் சிமென்ட் ஆலைகள் நிலங்களைத் தன்வசப்படுத்தி உள்ளன.
இதை ஒப்பிட்டு இழப்பீட்டுத் தொகையை இன்றைய சந்தை மதிப்புக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும். மேலும்,நிலம் கொடுத்தோரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு,வீடுகளை இழந்தவர்களுக்கு அடிப்படை  வசதிகளுடன் கூடிய வீடுகள்,கல்விக் கூடங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அனைத்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம்,உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில்,கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைக் கடுமையாக எதிர்த்து,பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு,நிலம் இழந்தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு தான் ஒருபிடி மண்ணைக்கூட அள்ள முடியும் என்று  கூறி​னர்.
இழப்பீட்டுத் தொகை அதிகமாக்கப்பட வேண்டும் என்று 9,882 விவசாயிகள் வழக்குத்  தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளை  விசாரிக்க அரசு சார்பில், இரு சார்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு வழக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே,ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து,பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான சுரங்கப் பணி,அனல் மின் திட்டப் பணிகளை எவ்வித இடையூறும் இன்றி தொடங்கி,மின் பற்றாக்குறையைப் போக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி:தினமணி
Source : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Trichy&artid=243292&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=ஜயங்கொண்டம் அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படுமா?

திங்கள்

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரியலூரில் தர்னா

ஜெயந்கொண்டம் அனல்மின் திட்டத்தை துவங்க கோரி பொதுமக்கள் போராட்டம் 
ஜெயந்கொண்டம் அனல்மின் திட்டத்தை உடனே துவங்க வலியுறுத்தி 17 கிராமங்களில் பொதுமக்கள் வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.அரியலூர் மாவட்டம்  ஜெயந்கொண்டம் அனல்மின் திட்டத்தை உடனே துவங்க வேண்டும்.திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வீடுதோறும் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.அல்லது இத்திட்டத்தை கைவிட்டு விவசாயிகளுக்கு நிலம் திரும்ப வழங்கி நஷ்ட ஈடுவழங்கவேண்டும் என ஜெயந்கொண்டம் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகளை   நிறைவேற்ற  அரசுநடவடிக்கை  எடுக்கவில்லை .அதை கண்டித்தும்  கோரிக்கைகளை விரைவாகக் நிறைவேற்றகோரியும் ஜெயந்கொண்டம் பகுதியிலுள்ள  உடையார்பாளையம்,செங்குந்தபுரம்,மேலூர்,இலையூர்,வரியங்காவல்,தேவனூர்,கொளத்தூர்,கல்வெட்டு,கீழகுடியிருப்பு,கல்லாத்தூர்,தண்டலை,புதுக்குடி,கண்டியங்கொல்லை உட்பட 22 கிராமங்களில் பொதுமக்கள் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்தை உடன​டியாகச் செயல்படுத்த வலியுறுத்தி அரியலூரில் தர்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற தர்னாவுக்கு ஆண்டிமடம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார்.தர்னாவை விவசாய சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்து பேசினார்.
இப்போராட்டத்தில் எஸ்.தங்கதுரை, எம்.தங்கராசு,ஜெ.கோவிந்தசாமி,எம்.ஆர்.சுந்தரேசன்,வாசுகி தங்கமணி,ஏ.சௌரிராஜன்,கே.நாகரத்தினம்,எஸ்.வீரமணி,சி.கொளஞ்சிநாதன்,எஸ்.என்.துரைராஜ், பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார் தர்னாவின் முடிவில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் த.ஆபிரகாமிடம் கொடுத்தனர்.அதில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்,நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுத் தொகை மற்றும் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்,இத்திட்டம் தொடங்கப்படவில்லையென்றால் விவசாயிகளிடமிருந்து பெற்ற நிலத்தை மீண்டும் அவர்களுக்கே திருப்பி வழங்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வியாழன்

பூச்சிகளை விரட்டும் "அரப்பு மோர்' கரைசல்

சிதம்பரம், மார்ச்  31: இயற்கை வேளாண் பண்ணைகளை கிராமங்களில் உருவாக்கி குறைந்த செலவில் அதிக லாபம் தரும் வேளாண் தொழில்நுட்பங்களை தமிழக விவசாயிகள் தெரிந்து கொள்வது தற்கால சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாகும்.
÷இயற்கை தொழில்நுட்பங்களில் ஒன்றான அரப்பு மோர் கரைசல் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் கிராமங்களில் பண்ணை மகளிர் அமைக்கும் வீட்டுக் காய்கறி மற்றும் பயிர் சாகுபடி நிலங்களில் எளிதாக வேளாண் பணிகளை சிறப்பான முறையில் செய்து அதிக லாபம் பெற அரப்பு மோர் கரைசலை தயாரிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவது வாயிலாக அதிகளவு மகசூல் பெற முடியும்.
÷தயாரிக்கும் முறை: நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.
÷இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும். பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும். பின்பு ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.
÷விவசாயிகள், பண்ணை மகளிர் குறைந்த செலவில் அரப்பு மோர் கரைசலை தங்கள் வீடுகளிலேயே தயார் செய்து குறைந்த காலத்தில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற முடியும்.
÷பிற பயன்கள்: அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும்.÷குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும். அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும்.
÷அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.
÷எனவே குறைந்த செலவில், காலத்தில் விவசாயிகளிடம் உள்ள இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை கொண்டு எளிதாக தயாரிக்கப்படும் அரப்பு மோர் கரைசலை தமிழக விவசாயிகள் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் கூறியுள்ளார்.
நன்றி:தினமணி
 
 

காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்க யோசனை

அரக்கோணம், மார்ச் 31: தோட்டக்கலை பயிர் சாகுபடியில் தொடர்ந்து விளைச்சல் கிடைக்கும் வகையில் கால இடைவெளியை பின்பற்றி பயிர் சாகுபடி செய்தால் நல்ல விலைக் கிடைக்கும் என்று தோட்டக் கலைத் துறை காவேரிபாக்கம் உதவி இயக்குநர் பரசுராமன் கூறினார்.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் பொன்னை உபவடி நீர்ப்பகுதி விவசாயிகளுக்கான இலவச இடுபொருள் வழங்கும் விழா அரக்கோணத்தை அடுத்த காவனூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பரசுராமன் பேசியது:

காய்கறிகளை பயிர் செய்வோர் தங்களின் நிலத்தை பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பகுதியில் முதல் சாகுபடி தொடங்கிய 15 நாள் கழித்து அடுத்த பகுதியில் சாகுபடியை தொடங்க வேண்டும்.

 இந்த குறிப்பிட்ட கால இடைவெளியை பின்பற்றி சாகுபடி செய்யும் விவசாயிகளால் ஆண்டு முழுதும் காய்கறிகளை தொடர்ந்து விற்பனைச் சந்தைக்கு கொண்டுச் செல்ல முடியும்.

 இதன் மூலம் தொடர்ந்து நல்ல விலையும், வருவாயும் கிடைப்பதுடன், குறிப்பிட்ட நேரத்தில் அதிக விளைச்சல் காரணமாக விலை குறைவு பிரச்னையை சந்திக்கும் சூழல் ஏற்படாது.

  விற்பனை சந்தையின் தேவைக்கும் குறைவாக காய்கறிகள் செல்லும்போது அவற்றுக்கு உரிய விலை கிடைக்கும் என்றார் பரசுராமன்.

கூட்டத்துக்கு ஏரிபாசன சங்கத் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். காவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் சரவணன், தோட்டக்கலைத் துறை அரக்கோணம் உதவி இயக்குநர் ஜெபக்குமாரிஅனி, நெமிலி உதவி இயக்குநர் விஜயராம், காவனூர் ஏரிப்பாசன தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
நன்றி:தினமணி
 
 
 

முந்திரியில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்...

பண்ருட்டி, மார்ச் 31:   முந்திரி உற்பத்தி குறைவுக்கான முக்கிய காரணங்களை கண்டறிந்து, நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக அளவு மகசூலை பெறலாம் என பண்ருட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். 
பண்ருட்டி வட்டத்தில் சுமார் 16,900 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள முந்திரி காடுகளில் இருந்து சுமார் 12 ஆயிரம் மெட்ரிக் டன் முந்திரி கொட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.   முந்திரியில் அதிக மகசூல் பெறுவது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளது:  விதை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தோப்புகள், வயதான மற்றும் உற்பத்தி திறன் குறைந்த தோப்புகள் இருத்தல், மண் வளம், மரங்களை பராமரிப்பு செய்தல் குறைவு, உரமிடாமை, பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளாமையால் முந்திரி உற்பத்தி திறன் குறைகிறது.  
முந்திரியில் அதிக அளவு மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடியது தேயிலைக் கொசு பூச்சியாகும். இப்பூச்சியால் 25 சதவீதம் தளிர், 30 சதவீதம் பூங்கொத்து மற்றும் 15 சதவீதம் இளங்கொட்டை பருவங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. 
முந்திரி பிஞ்சுவிடும் பருவத்தில் கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.0 கிராம் வீதம் கரைத்து, இலைகள் நன்றாக நனைந்து ஒழுகும்படியும், உள்வாட்டத்தில் சிம்புகளிலும், கிளைகளிலும் பரவலாக தெளிக்க வேண்டும். 
எக்காரணம் கொண்டும் பைரித்திராய்டு மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்தக் கூடாது என பண்ருட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
நன்றி:தினமணி
 
 
 

முந்திரியில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முந்திரியில் தேயிலை கொசுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது.
முந்திரியை தாக்கும் பூச்சிகளில் தேயிலைக் கொசுவும் ஒன்றாகும். இது முந்திரியில் அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடியது. இத்தேயிலை கொசு முந்திரி மரத்தில் இளந்தளிர், பூங்கொத்து மற்றும் பிஞ்சு உருவாகும் பருவங்களில் தாக்கி சேதம் விளைவிக்கும். எனவே இப்பூச்சியின் தாக்கத்தை அறிந்துகொண்டு கட்டுப்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.
தற்போது விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முந்திரி பூக்கும் தருவாயில் உள்ளது. இத்தருனத்தில் இப்பூச்சியானது பூங்கொத்து மற்றும் பிஞ்சுகளின் சாற்றை உறிஞ்சி அவற்றை காய்ந்து கருகிவிடச் செய்கின்றன. பாதிப்பு அதிகமானால் தாக்குண்ட கிளைகள் முழுவதும் கருகிவிடும்.  எனவே, இப்பூச்சியை முந்திரி பூக்கும் பருவத்தில் கட்டுப்படுத்த எண்டோசல்பான் 35இசி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி(அ) குளோர்பைரிபாஸ் 20இசி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
அத்தோடு பூக்கள் கொட்டுவதை தடுக்க இந்த மருந்தோடு லிட்டருக்கு 2-3 கிராம் என்ற அளவில் யூரியாவை பயன்படுத்தலாம். இது தவிர புரோபினோபாஸ் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 1.5 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்கவும். பின்னர் முந்திரி பிஞ்சுவிடும் பருவத்தில் இப்பூச்சியை கட்டுப்படுத்த கார்பரில் 50 சதவீத நனையும் தூள் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.0 கிராம் வீதம் கரைத்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை கடைபிடித்தோமானால் முந்திரியில் அதிக மகசூல் பெற்று லாபம் அடையலாம் என வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
 நன்றி:தினமணி 
Source: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=206184&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=முந்திரியில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முந்திரி ஊறுகாய் தயாரித்தால் லாபம்



தமிழகத்தில் முந்திரி ஒரு பணப்பயிராக சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும் முந்திரிபருப்பு மட்டுமே அதிக வர்த்தக வாய்ப்புள்ள பொருளாக விற்பனை செய்யப்படுகிறது.
முந்திரிப்பழம் குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நிலையே நடைமுறையில் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் முந்திரி பழத்தில் மதிப்பு கூடிய பொருள்களான முந்திரி மிட்டாய், முந்திரி ஊறுகாய், முந்திரிஜாம் உள்ளிட்ட பொருள்கள் தயாரித்து விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும்.
முந்திரி ஆப்பிள்: முந்திரியின் பழத்தை பல மாநிலங்களில் "முந்திரி ஆப்பிள்' என்ற பெயரில் அழைக்கின்றனர். முந்திரி பழம் வெகு வேகமாக பதப்படுத்தப்படுவதால் கெட்டுவிடும் தன்மை கொண்டது.
இத்தகைய சூழலில் முந்திரி பழத்தில் இருந்த தயாரிக்கப்படும் மதிப்பு கூடிய பொருள்களை பல மாதங்களுக்கு கெட்டுப் போகாமல் வைத்து ஒரு நுகர்வு
உணவு பொருளாக விற்பனை செய்ய முடியும்.
முந்திரி ஆப்பிள் மிட்டாய்: விவசாயிகள் நல்ல தரமான அழகான முந்திரி ஆப்பிள் பழங்களை மிட்டாய் தயாரிக்க தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் மேல் தோலை நன்றாக அகற்றிவிட்டு சர்க்கரை கரைசலில் நன்றாக வேக வைக்க வேண்டும். ÷மிருதுவான தன்மையை அடைந்தவுடன் மேலும் சர்க்கரை கரைசலின் அடர்தன்மை அதிகரிக்கச் செய்ய வேண்டும். பின்னர் இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆப்பிள் மிட்டாயை 2 வார கால அளவில் சர்க்கரை நீர் வடியும் வரை காய வைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்க 2 அல்லது 3 வார காலமாகும்.
ஒரு கிலோ முந்திரி பழத்திலிருந்து 745 கிராம் வரை முந்திரி ஆப்பிள் மிட்டாயை தயாரிக்க முடியும். அதிகளவு வைட்டமின்-சி சத்துக்கள் கொண்ட முந்திரி ஆப்பிள் முட்டாய் 50 கிராமின் விலை ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முந்திரிஜாம்: முந்திரி பழங்களை நன்றாக கழுவி உப்பு கரைசலில் 2 அல்லது 3 நாள்களுக்கு முக்கி மேல் தோலை அகற்றிவிட வேண்டும். பின்னர் முந்திரி பழத்தை நன்றாக தண்ணீரில் கழுவி, வேக வைத்து கூழாக மாற்றி மாம்பழ கூழ் உடன் கலக்க வேண்டும்.
பின்னர் போதுமான சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் கலந்து முந்திரி ஜாம் தயாரிக்கலாம். அதிகளவு வைட்டமின் "சி' சத்துள்ள முந்திரி ஜாமை ஆறுமாத காலம் வரை வைத்து விவசாயிகள் சந்தைகளில், வணிக வளாகத்தில் விற்பனை செய்ய முடியும். தற்போது 350 கிராம் கொண்ட முந்திரி ஜாம் ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
முந்திரி ஊறுகாய்: நன்றாக முற்றிய முந்திரி பழங்களை தோட்டத்திலிருந்து விவசாயிகள் காய் மற்றும் பூக்களை சேதப்படுத்தாமல் பறிக்க வேண்டும். பின்னர் நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். பின்னர் உப்பு கரைசலில் போட்டு நன்றாக மூழ்க செய்ய வேண்டும். இதனால் சில கசப்புகள் மற்றும் வாசனைகள் வெளியேறிவிடும். பின்னர் உப்பு கரைசலில் இருந்து பழத்துண்டுகளை எடுத்து மீண்டும் நன்றாக கழுவி, ஊறுகாய் செய்வது போல் மஞ்சள் பொடி, மிளகாய்பொடி, பூண்டு, கொத்தமல்லியை சேர்த்து எண்ணெய்யில் ஊறுகாய் தயார் செய்ய வேண்டும். இவ்வாறு தயார் செய்யப்படும் முந்திரி ஊறுகாய் 250 கிராம் ரூ.25 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
பயிற்சி: ""முந்திரி மதிப்புக்கூடிய பொருள்களை தயாரித்து விற்பனை செய்ய தொழில்நுட்ப பயிற்சிகள் மேற்கொள்ள விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுவினர், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் கேரளத்தில் உள்ள முந்திரி ஆராய்ச்சி நிலைய உற்பத்திக் கூடத்தை அணுகலாம்'' என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவிக்கிறார்.
÷தொடர்பு முகவரி: இயக்குநர், முந்திரி ஆராய்ச்சி நிலையம், மடக்கத்தரா, கேரளா-680651.
நன்றி:தினமணி
Source: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Chennai&artid=206178&SectionID=97&MainSectionID=97&SEO=&Title=முந்திரி ஊறுகாய் தயாரித்தால் லாபம்